பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பிற்சேர்க்கை

385


'மலையாளத் தாவர நூல்' (Horti Indict Malabarici) என்னும் தமிழ் நூல், ஹாலந்து நாட்டின் தலை நகரமான ஆம்ஸ்டர்டாமில், கி. பி. 1686 இல் அச்சிடப்பட்டது. ஷுல்ஸ் ஐயர் என்னும் ஜெர்மானியர், 'பரதிஸ் தோட்டம்' (garden of paradise) என்னும் நூலைத் தமிழில் மொழிபெயர்த்து 1749-இல் அச்சிட்டார். அவரே True Christianity என்னும் நூலை மொழிபெயர்த்து 'ஞானக்கண்ணாடி' என்னும் தலைப்பில் 1750 இல் அச்சிட்டார். இவ்விரு நூல்களும் ஜெர்மன் நாட்டின் ஹாலி (Halle) நகரத்தில் அச்சிடப்பட்டன. ஏறத்தாழ இதே காலத்தில் இத்தாலிய நாட்டைச் சேர்ந்த ரோம் நகரிலும் சில தமிழ் நூல்கள் அச்சிடப்பட்டன.

தமிழகத்திலும் அச்சு இயந்திரங்களை வரவழைத்துத் தமிழ் நூல்கள் அச்சிட ஐரோப்பியர் முயன்று வெற்றி கண்டனர். 1578 இல் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள புன்னைக்காயல் என்னும் இடத்தில் அச்சுக்கூடம் ஏற்பட்டது. கொச்சி, வைப்புக்கோட்டை, அம்பலக்காடு முதலிய பல நகரங்களில் அச்சு இயந்திரங்கள் தோன்றித் தமிழ் நூல்களை அச்சிட்டன.

தமிழ் நாட்டில் அச்சான முதல் தமிழ் நூல் "கிறித்தவ வேதோபதேசம்" என்று, மயிலை சீனி வேங்கடசாமி குறிப்பிடுகிறார். இந்நூல் கி. பி. 1577 இல் வைப்புக் கோட்டையில் நிறுவப்பட்ட அச்சு இயந்திரத்தில் அச்சிடப்பட்டது. இதற்குரிய தமிழ் எழுத்துகளை, ஏசுசபைப் பாதிரியாராகிய கோண்ஸால்வஸ் என்னும் ஸ்பெயின் நாட்டவர் உருவாக்கிக் கொடுத்தார். 1579 இல் 'கிறித்துவ வணக்கம்' என்னும் நூல் கொச்சியில் அச்சிடப் பெற்றது. இதே ஆண்டில் அம்பலக்காட்டில், 'போச்சுகீஸ் தமிழ்ப் புத்தகம் ஒன்று அச்சிடப்பெற்றது. இந்நூலுக்கான தமிழ் எழுத்துகளை நம் நாட்டவரான இன்னாசி ஆச்சாமணி (Ignatius Aichamani), என்பவர் உருவாக்கினார். இந்நூல்கள் 'மலபார்' மொழியில் அச்சிடப்பட்ட நூல்கள் என்று சிலர் எழுதியுள்ளனர். இரண்டும் தமிழ் நூல்களே. தமிழ் மொழியை அக்காலத்தில்

த.-25