பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

386

தமிழ் இலக்கிய வரலாறு


சில ஐரோப்பியர்கள் 'மலபார் மொழி' என வழங்கிவந்தனர். மேற் குறிப்பிட்ட அம்பலக்காட்டு அச்சுக்கூடம் 1550இல் நிறுவப்பட்டது.

புன்னைக்காயல் என்னும் ஊரில் 1578 ஆம் ஆண்டு, ஏசுசபைப் பாதிரிமார் தமிழ் கற்பதற்காக ஒரு கல்லூரி நிறுவப்பட்டது. அக் கல்லூரி மாணவர்களுக்கான நூல்களை அச்சிட, கல்லூரியின் தலைவர் என்ரீகஸ் (Er Henriquez) என்பவரின் முயற்சியால், அவரது மேற்பார்வையின்கீழ் ஓர் அச்சுக்கூடம் தோன்றியது. ஜோவாட்டி - பாரிய (Joav de Faria) என்பவர், இவ்வச்சுக் கூடத்துக்கான தமிழ் எழுத்துகளை உருவாக்கிக் கொடுத்தார். இவ்வெழுத்துகள் மரவெழுத்துகளாக இருக்கக்கூடும் என்று கருதுகின்றனர். இங்குப் பல தமிழ் நூல்கள் அச்சிடப் பெற்றன.

பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஸீகன் பால்கு ஐயர் என்னும் டேனீஷ் பாதிரியார் தஞ்சை மாவட்டத்தின் தரங்கம்பாடியில் தங்கித் தொண்டாற்றினார். அவர் ஜெர்மனியிலிருந்த நண்பர்களுக்கு ஒரு கடிதம் எழுதி, தமக்கு வேண்டிய நூல்களையும், தம்மிடம் பயிலும் மாணவர்களுக்குத் தேவையான பாடநூல்களையும் ஓலைச் சுவடியில் எழுதித் தயாரிப்பது காலச் செலவும் பொருட் செலவும் மிக்கதாக இருக்கிறது என்றும், அவ்வாறே காலமும் பொருளும் செலவிட்டாலும் ஒரு சில படிகளையே உருவாக்க முடிகிறதென்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், குறைந்த செலவில், எண்ணற்ற படிகளை உருவாக்கத் தமிழ் அச்செழுத்துகளையும், அச்சு இயந்திரம் ஒன்றையும் தமக்கு அனுப்பி வைக்குமாறும் நண்பர்களை வேண்டினார். ஸீகன் பால்கு ஐயரின் சிறந்த செர்மன் நண்பர்கள், அவர் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்து. தமிழ் அச்செழுத்துகளையும் அச்சுப்பொறியையும் அவருக்கு அனுப்பி வைத்தனர். கி. பி. 1713 ஆம் ஆண்டு அவை தரங்கம்பாடிக்கு வந்து சேர, அதே ஆண்டில் அச்சகம் செயல்படத் தொடங்கியது. ஸீகன்