பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/390

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. இந்திய நாட்டின் விடுதலை இயக்கமும்
தமிழ் நாட்டில் அதன் செல்வாக்கும்

போர்ச்சுகீசியர், டச்சுக்காரர், டேனிஷ்காரர், ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர் என்று, ஐந்து ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் நம் நாட்டில் புகுந்தனர். இவர்களுள் ஆங்கிலேயர் நம் நாட்டில் காலூன்றிப் பிற ஐரோப்பியர்களின் செல்வாக்கைச் சிதைத்தனர். ஆங்கிலேயரின் கிழக்கிந்தியக் கம்பெனி உள் நாட்டு விவகாரங்களில் தலையிட்டு, மெல்ல மெல்லத் தன் ஆதிக்க வலையை இந்திய நாடு முழுதும் பரப்பியது. 1799 இல் கம்பெனி, தென்னிந்தியாவில் மைசூர் சுல்தானைத் தோற்கடித்தது. 1818 இல் வட இந்தியாவில் மகாராட்டிரரை வென்றது. அதன்பின் அகண்ட பாரதமே ஆங்கிலேயரின் ஆட்சிக்கு உட்பட்டு அடிமையானது.

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவ்வப்போது அதை எதிர்த்துப் போராடினர்; புரட்சி செய்தனர். 1806 ஆம் ஆண்டு வேலூர்க் கோட்டையிலிருந்த சிப்பாய்கள் ஆங்கிலேயர்க்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து புரட்சி செய்தார்கள். அதில் 100 வெள்ளைக் காரர்கள் கொல்லப்பட்டனர். உடனே ஆர்க்காட்டிலிருந்த கர்னல் கில்லஸ்பி (Col Gillespie) ஒரு படையுடன் சென்று, முந்நூறு இந்தியச் சிப்பாய்களைக் கொன்று புரட்சியை அடக்கிவிட்டார். ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து நடந்த முதன் போராட்டமே இந்த வேலூர்ப் புரட்சி. இந்திய விடுதலைப்போரைத் தொடங்கிவைத்த பெருமையை வேலூர்ப் புரட்சி மூலம் தமிழர்கள் பெற்றார்கள்.

வட இந்தியாவில் 1857 இல் பேரளவில் விடுதலைப்போர் ஒன்று நடந்தது. அதனை வெள்ளையர் 'சிப்பாய்க் கலகம்' என்று குறிப்பிட்டனர். சிப்பாய்களும் பொதுமக்களும் ஒன்று சேர்ந்து ஆங்கிலேயரை எதிர்த்துப்புரட்சி செய்தனர். புரட்சித்தீ பல நகரங்களுக்கும் பரவியது என்றாலும், முடிவில் தோல்வி கண்டது. இப் புரட்சியின் விளைவாக