பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

392

தமிழ் இலக்கிய வரலாறு

இரண்டாம் உலகப் போருக்குப் பின், வல்லரசுகள் உலக நிலைக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவானது. ஆங்கிலேயர் தம் ஆதிக்கத்திலிருந்த இந்தியா, பர்மா, இலங்கை முதலிய நாடுகளுக்கு உரிமை வழங்கினர். இவற்றுள் இந்தியா மட்டும், இந்தியா, பாக்கிஸ்தான் என்னும் இரு நாடுகளாகப் பிரிக்கப்பட்டன. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டுத் திங்கள் 15 ஆம் நாள் இந்தியா விடுதலை பெற்றது. இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக மவுண்ட்பேட்டன் பிரபுவே விளங்கினார். அவருக்குப்பின், தமிழ்நாட்டவரான இராஜாஜி நியமிக்கப்பட்டார்.

இந்திய தேசிய விடுதலைப் போரின் போது தமிழ் இலக்கியமும் அதனை எதிரொலித்தது, வளர்ந்தது. சுப்பிரமணிய பாரதியார் தம் பாடல்கள் மூலமும் பத்திரிகைகள் மூலமும் சுதந்திர உணர்வை வளர்த்தார். நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை , சுத்தானந்த பாரதி, வ. ரா., கல்கி. ரா. கிருஷ்ணமூர்த்தி. வெ. சாமிநாத சர்மா, வேங்கடரமணி முதலியோர் தம் எழுத்தால் தேசியத்தையும் செந்தமிழையும் வளர்த்தனர். தமிழ் மொழி, முன் எப்போதும் இல்லாத அளவு நாட்டு விடுதலைப் பாடல்களை யும், கதை, கட்டுரைகளையும் பெற்று வளமுற்றது.

இந்திய தேசிய இயக்க வரலாற்றிலும், இந்திய விடுதலைக்கான போராட்டத்திலும், தமிழ் நாட்டின் பங்கும், தமிழரின் பணியும் பெருமை கொள்ளத்தக்க அளவினதாய் அமைந்தன. இந்தியச் சுதந்திரப் பயிருக்குத் தமிழரின் கண்ணீரும் செந்நீரும் போதிய அளவு பாய்ச்சப்பட்டன. தமிழ்நாட்டு மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்துகிடந்தும், நுாலோர்கள் செக்கடியில் நொந்தும், மாதரையும் மக்களையும், வன்கண்மையால் பிரிந்து காதல் இளைஞர் கருத்தழித்தும், இதந்தரும் கோடி இன்னலின் விளைவை அனுபவித்தும், சுதந்தரத் தேவியைத் தொழுது, விடுதலை வேள்வியை இயற்றி வெற்றி பெற்றனர். இன்று நாம் துய்க்கும் சுதந்திரம் நம் முன்னோர் உழைப்பால், தியாகத்தால் உருவானது என்பதை யாரும் என்றும் மறக்க முடியாது.