பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்க காலம்

39

"நற்றிணை' என்ற பெயர் தந்திருக்கிறார். நற்றிணையின் அகச்சுவை கெழுமிய பாடல்களில் மக்கள் அறவாழ்வு, மன்னர் கொடை, ஆட்சித் திறம், ஒருமைப்பாடு, பழந்தமிழர் பழக்க வழக்கங்கள், உவமைத் திறம் , உள்ளுறை, இறைச்சிப் பொருள்களின் அமைப்பு முதலியவற்றினைக் காண்கிறோம். நற்றிணையைப் பாடிய புலவர் இருநூற்றெழுபத்து ஐவர். அவர்களில் தாங்கள் பாடிய பாடல்களின் பாவடித் தொடர்களாலே பெயர் பெற்ற புலவர்கள் வண்ணப்புறக் கந்தரத்தனார், மலையனார், தனிமகனார், விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார், தும்பிசேர்கீரனார், தேய்புரிப்பழங்கயிற்றினார், மடல் பாடிய மாதங்கீரனார் என்பவராவர்.

நீர் எவ்வாறு உலக வாழ்க்கைக்கு இன்றியமையாததோ அவ்வாறே தலைவி உயிருடன் இயங்குவதற்குத் தலைவனது அருள் தோய்ந்த காதல் நெஞ்சம் இன்றியமையாத தாகும்.


‘நீரின் றமையா வுலகம் போலத்
தம்மின் றமையா நந்தயந் தருளி.வ’’

______1:6-7

மேலும், இரவில் விருந்தினர்வந்தாலும் மனைவி கணவனுடன் மன மகிழ்ச்சியுடன் வரவேற்று விருந்து படைக்கும் செய்தி,


‘அல்லி லாயினும் விருந்துவரின் உவக்கும்
முல்லை சான்ற கற்பின் மெல்லியல்?

______142:9-10


என்னும் பகுதியால் அறியலாகும்.


‘பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்’


என்னும் குறட்பாவின் கருத்து.