பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்க காலம்

41


வருகிறது. இப்பொழுது அப்பழைய உரைகள் கிட்டவில்லை. ‘‘புறத்தே தோன்றும் காட்சிகளைச் செய்யுள்களிற் புனைந்து காட்டும் ஆற்றலினும், அகத்தே தோன்றும் காட்சிகளை உணர்ச்சியும் மெய்ப்பாடும் புலப்பட உரைக்கும் ஆற்றல் மிகவும் சிறந்தது.[1] இச் சிறப்புக்குச் சான்று பகர்வனவாய்க் குறுந்தொகைப் பாடல்கள் இனிமையும் எளிமையும் கொண்டு இலங்குகின்றன. இச் செய்யுள்களிற் காணப்படு வனவாகிய தலைவன் தலைவியரிடையே வளரும் அன்பு நிலை, அவர் இல்லறம் நடத்தும் முறை முதலியன உலகியலைச் செம்மைப் படுத்தும் தன்மையன.’’[2]

குறுந்தொகைப் பாடல்களில் இயற்பெயரும் சிறப்புப் பெயரும் ஒருங்கே அமைந்த புலவர்களான ஐந்து புலவர்களும், தங்கள் பாடலிற் கூறிய உவமைநயத்தால் பெயர் பெற்றவராய்ப் பதினெண்மரும் காணப்படுகின்றனர். பரணர் பாடும் பாடல்கள் பெரும்பாலானவற்றில் அரிய வரலாற்றுக் குறிப்புகளைக் காண்கிறோம்.

எங்கேயோ வெவ்வேறிடத்திற் பிறந்த தலைவனும் தலைவியும் காதலிற்றோய்ந்து கருத்தொருமித்து ஒன்றுபடுகின்றனர். இருவருடைய தாயும் தந்தையரும் ஒருவரையொருவர் அறியமாட்டார். ஆயினும், முன்பின் தொடர் பில்லாத இவர் இன்று காதலில் ஒன்றுபட்ட நிலையில் செம்மண் நிலத்தில் மழைநீர் எவ்வாறு அந்நிலத்து மண்ணோடு கலந்து மண்ணின் நிறத்தினைப் பெறுகின்றதோ அதுபோன்று, அன்பால் பிணைந்த நெஞ்சமிரண்டும் ஒன்று கலந்தன என்பது உரைக்கப்பட்டுள்ளது;

“யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
  1. டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர், குறுந்தொகை, முன்னுரை. ப. 32.
  2. டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர், குறுத்தொகை, முன்னுரை. ப. 25,