பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

தமிழ் இலக்கிய வரலாறு


பகைவர் புல்லார்க பார்ப்பார் ஒதுக
பசியில் லாகுக பிணிசேண் நீங்குக.
வேந்துபகை தணிக யாண்டுபல நந்துக.

அறம்நனி சிறக்க அல்லது கெடுக."

பதிற்றுப்பத்து

பத்துச் சேர அரசர்களைப் பற்றிப் பத்துப் புலவர்கள் பாடிய பத்துப்பாடல்களே பதிற்றுப்பத்து என்னும் நூலாகும். முதற்பத்தும் இறுதிப்பத்தும் இன்று கிட்டவில்லை. அகவற் பாவாலான புறப்பொருள் நூல் இது. அக்கால அரசர்களைப் பற்றிய வரலாற்றிற்கும் ஆராய்ச்சிக்கும் உறுதுணையாய் இருக்கிறது. ஒவ்வொரு பாட்டின் முடிவிலும் துறை, வண்ணம் தூக்கு (இசை), பெயர் என்பவற்றைப் புலப்படுத்தும் குறிப்புகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு பாட்டிலும், பொருளால் சிறப்புடைத் தொடரொன்று, அவ்வப்பாட்டின் பெயராய் அமைந்துள்ளது. பிற்காலத்தில் அந்தாதித் தொடையிற் பாடல்கள் இயற்ற வந்தவர்களுக்கு இஃது ஓர் வழிகாட்டியாகும். ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் அப் பத்தினைக் கூறும் வரலாற்றைக் கொண்ட பதிகம் காணப்படுகிறது. அப் பதிகம், பாடினார் தம் பெயர். பத்துச் செய்யுள்களின் பெயர், பாடினார் பெற்ற பரிசிலின் அளவு, அவ்வரசர் ஆண்ட கால அளவு ஆகியவற்றைப் புலப்படுத்துகிறது. பிற்காலக் கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் காணப்படும் மெய்க்கீர்த்திகள் போல இப் பதிகங்கள் அமைந்துள்ளன.

இரண்டாம் பத்து, இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர்க் கண்ணனார் பாடியது. மூன்றாம் பத்து, பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக் கெளதமனார் பாடியது. நான்காம் பத்து, களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரலைக் காப்பியாற்றுக் காப்பியனார் பாடியது. ஐம்தாம் பத்து. கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைப்