பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

தமிழ் இலக்கிய வரலாறு

வழக்கங்களையும் தமிழ்நாட்டின் வரலாறுகள் சிலவற்றையும் செவ்வனே தொிந்து கொள்வதற்குக் கருவியாய் உள்ளது". இந்நூலுள்,

"யாஅ மிரப்பவை
பொருளும் பொன்னும் போகமுமல்ல நின்பால்
அருளும் அன்பும் அறனும் மூன்றும்

உருளிணர்க் கடம்பி னொலிதா ரோயே!'
-பரி. 5:78-81

என்று முருகனைப் பரவுவது முதலான அடிகள் அரிய கருத்துகளுடன் பொலிகின்றன.

இந்நூலுக்கு உரை கண்டவர் பரிமேலழகர் ஆவர்.

கலித்தொகை

'கற்றறிந்தார் ஏத்தும் கலி', 'கல்விவலார் கண்ட கலி' என்னும் தொடர்கள் கலித்தொகையின் மாட்சியினை நன்கு விளக்குவனவாகும். இந்நூல் ஐந்து திணைகளாகப் பகுக்கப்பட்டு மொத்தம் நூற்றைம்பது பாடல்களைக் கொண்டுள்ளது. இன்பப் பொருளைச் சொல்வதற்கு இயன்ற கலிப்பாவால் ஆனதொரு நூல். பாவகையால் பெயர்பெற்றுத் துள்ளல் ஓசை மிகுந்து வருவது. ஐந்திணைக்கும் உரிய உரிப் பொருள்களை - ஒழுகலாறுகளை - இந்நூல் செவ்வனே எடுத்தியம்புகிறது.

'போக்கெல்லாம் பாலை புணர்தல் நறுங்குறிஞ்சி
ஆக்கமளி ஊடல் அணிமருதம் - நோக்கொன்றி
இல்லிருத்தல் முல்லை இரங்கியபோக் கேர்நெய்தல்

புல்லுங் கலிமுறை கோப்பு'.

பாலைத் திணையைப்பற்றிய முப்பத்தைந்து பாடல்களைப் பாடியவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ. குறிஞ்சி பற்றிய