பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

தமிழ் இலக்கிய வரலாறு


இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லென
மழலை இன்சொல் பயிற்றும்

நாணுடை அரிவை ........................'
- அகம் 34

போன்ற பகுதிகள் இலக்கிய வானில் இணையற்று எஞ்ஞான்றும் ஒளிவீசித் திகழ்கின்றன.

தித்தன், நன்னன், பிட்டன், பண்ணன், கோசர், மோரியர், பாரி, காரி. கொடித்தேர்ச் செழியன், அத்தி, கங்கன், கட்டி, புல்லி முதலியவர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை நாம் அக நானூற்றில் காண்கிறோம். மக்கட் பேற்றின் சிறப்பினைச் சில பாடல்கள் எடுத்தியம்புகின்றன. ஐந்து நிலங்களின் வருணனை பொருத்தமுற, அழகுற. படிப்பவர் மனத்திரையில் காட்சிகளை விரிக்கின்ற அளவுக்குப் படம் தீட்டிக் காட்டப்படுகின்றன. நல்ல உவமைகளும், உள்ளுறைப் பொருள்களும் ஆங்காங்கே விரவி வரக் காண்கிறோம். புலவர்கள் ஒருவர்பால் மற்றொருவர் கொண்ட மதிப்பினைக் கண்டு வியக்கிறோம்! குடவோலை மூலம் நாட்டுக்கு வேண்டிய நல்லவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையை ஓர் அகப்பாடல் விளக்குகிறது. ஆதிமந்தியார் என்னும் பெண்பாற்புலவர் பேதுற்று அலைந்த காட்சியை ஒரு புலவர் குறிப்பிடுகிறார். திருமணம் அக் காலத்தில் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை நாம் அறிய வேண்டுமானால், அக நானூற்றில் அமைந்துள்ள நல்லாவூர் கிழாரின் பாடலையே நாட வேண்டியுள்ளது. இவ்வாறு பலவகைச் சிறப்புகளையும் கொண்டு அகநானூறு விளங்குகிறது.

புறநானூறு

பாரதம் பாடிய பெருந்தேவனாரின் சிவனைப் பற்றிய கடவுள் வாழ்த்துச் செய்யுளுடன், முரஞ்சியூர் முடிநாகராயர் தொடங்கிக் கோவூர்கிழார் இறுதியாகப் பல்வேறு புலவர்