பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

தமிழ் இலக்கிய வரலாறு


எம் அம்பு கடிவிடுதும் நும் அரண் சேர்மின் என

அறத்தாறு நுவலும் பூட்கை மறம்'.
- புறம் : 9

அரசன் தவறிய காலத்திலும் அஞ்சாது இடித்துரைத்து அவனைத் திருத்திய புலவர் பெருமக்களை நாம் காண்கிறோம். எனவேதான் திணை, துறை வகுத்தவர்கள் அரசனைக் குறிப்பிடும் பொழுது 'அவன்' என்றும், புலவர்களைக் குறிப்பிடும்பொழுது 'அவர்' என்றும் குறிப்பிட்டார்கள். அரசர்களே பாடிய சில பாடல்களும் புறநானூற்றில் காணப்படுகின்றன. அப் பாடல்கள் அவர்தம் வீரத்தினையும் ஒழுக்கத்தினையும் புலவர்மாட்டுக் கொண்ட மதிப்பினையும் புலப்படுத்துகின்றன. ஒளவையார் பாடல்களிலே அதியமானின் சிறப்பும், நயம்பொருந்திய கபிலர் பாடல்களிலே பாரியின் சிறப்பும் நமக்குப் புலனாகின்றன. வானநூல் கருத்துகள் சில புலவர்கள் பாடல்களில் இடம் பெற்றிருப்பது நம் முந்தையோரின் அறிவினை வியக்கத் தூண்டுகிறது. "செல்வத்துப் பயனே ஈதல்" என்று அரசர்களும்,

'பீடின் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டிச்
செய்யா கூறிக் கிளத்தல்

எய்யா தாகின்றுஎம் சிறுசெந் நாவே'

என்று புலவர்களும்,

'நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்'

என்று மக்களும் வாழ்ந்த வாழ்வு புலனாகின்றது.

'மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர்

தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே'

| என்பதற்கு இலக்கியமாகப் பழந்தமிழர் வாழ்ந்தனர் என அறிகிறோம்.