பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

தமிழ் இலக்கிய வரலாறு


இலக்கிய மரபினை நாம் வேறு எம்மொழியினும் காண இயலாது. அது தமிழுக்கே தனிச்சிறப்பாய் அமைந்ததாகும். ஆற்றுப்படை நூல்களின் தோற்றமே பிற்காலக் கலம்பகங்கள், தனிப்பாடல்கள், புலவராற்றுப்படை, திருத்தணிகையாற்றுப் படை, திருப்பாணாற்றுப்படை முதலியனவற்றில் வளர்ச்சி பெற்றிருக்கக் காண்கிறோம்.

திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை ஆகிய இரண்டினையும் இயற்றியவர் நக்கீரர். பெரும்பாணாற்றுப் படை, பட்டினப்பாலை ஆகிய இரண்டு நூல்களும் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியன. மதுரைக் காஞ்சியை மாங்குடி மருதனாரும், சிறுபாணாற்றுப்படையை நல்லூர் நத்தத்தனாரும், குறிஞ்சிப் பாட்டைக் கபிலரும், மலைபடு கடாம் என்னும் நூலைப் பெருங்கௌசிகனாரும், முல்லைப்பாட்டினை நம்பூதனாரும் பாடியுள்ளனர்.

'தீயின் அன்ன ஒண்செங் காந்தள்' என்று மலைபடு கடாத்துள் வருகின்ற அடிக்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையினால், சங்கப் புலவர்களே இந்நூலைத் தொகுத்தவர்கள் என்பது தெரியவருகிறது. நூல் முழுமைக்கும் நச்சினார்க்கினியரின் அரிய உரை உளது. அவ்வுரையைப் படிக்கும் பொழுது அவருக்கு முன்னும் ஒருவர் இதற்கு உரை வகுத்திருக்கலாம் என்பதை ஊகிக்கலாம்.

கற்பனை வளமும், கருத்துச்செறிவும், உணர்வூட்டும் திறமும், அறிவூட்டும் ஆற்றலும், சுவைபடச் சொல்லும் நயமும் பெற்ற பண்டைத்தமிழர் வாழ்க்கை நிலையினைப் பத்துப்பாட்டு, 'ஆடியின் நிழல் போல' விளக்கி நிற்கிறது. இலக்கணத்தோடு இயைந்த கற்பனையை இந்நூலில் பரக்கக் காணலாம்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவதாகக் கூறப்படும் நூல் இது; புலவராற்றுப்படை என்றும் வழங்கப்படும். 317 அடிகளை