பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்க காலம்

57


யுடைய ஆசிரியப்பாவால் அமைந்த நூல் ஆகும்; சைவர்கள் முருகன் திருவருள் வேண்டி, நாள் தோறும் பாராயணம் செய்யும் நூல். சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் பதினோராந் திருமுறையில் இஃது இடம் பெற்றுள்ளது. பிற்காலப் புலவர் பலரும் இதன் பெருமையினைப் பலபடப் பாராட்டிப் பேசுகின்றனர்.[1]

முருகாற்றுப்படை என்னும் தொடருக்கு 'வீடு பெறுதற்குச் சமைந்தானோர் இரவலனை, வீடு பெற்றானொருவன் முருகனிடத்தே ஆற்றுப்படுத்தது' என்று பொருள் கூறியிருக்கிறார் நச்சினார்க்கினியர். எனவே, இஃது மற்ற ஆற்றுப்படைகளின் அமைப்பினின்றும், இலக்கணத்தினின்றும் மாறுபட்டிருக்கின்றது. மற்ற ஆற்றுப்படைகள் ஆற்றுப்படுத்தப் படுபவர்களது பெயரோடு சார்த்தி வழங்கப்படுகிறது. ஆனால், திருமுருகாற்றுப்படை பாட்டுடைத் தலைவனின் பெயரோடு சார்த்தி வழங்கப்படுகிறது. பிற ஆற்றுப் படைகளின் விளக்கமான துறைகள் இதில் அமையாமல், அவை எல்லாம் உய்த்துணரும் வகையில் அமைந்திருக்கின்றன.

முருகப்பெருமான் கோயில் கொண்டிருக்கும் ஆறுபடை வீடுகளை இஃது இனிமையுற விளக்கி நிற்கின்றது. திருப்பரங்குன்றத்திலே முருகனின் தோற்றப் பொலிவு விளக்கமுறுகிறது. திருச்சீரலைவாய் என்னும் திருச்செந்தூரிலே ஆறுமுகமும் பன்னிருகையுமாய் அடியவர்க்கு அருள் வழங்குவான் வேண்டி யானைமீது எழுந்தருளுகின்றான் திருமுருகன். திருவாவினன்குடியில் தேவர்களும் முனிவர்களும் முருகனைப் பரவுகிறார்கள். திருவேரகம் என்னும் சுவாமி மலையில் அந்தணர் பற்றிய செய்திகளும், அவர் வழிபாட்டு முறைமை


  1. “பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ எத்துணையும் பொருட்கியையும் இலக்கணமில் கற்பனையே” - பேராசிரியர் சுந்தரம்பிள்ளை