பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்க காலம்

59


பாடுவோர் எனப் பொருநர் பல வகைப்படுவர். இப்பாட்டில் பேசப்படும் பொருநன் போர்க்களம் பாடுவோன்.

இது திருவிழாவிலே பொருநர்கள் கூடித் தங்கள் கலைத் திறனைக் காட்டிப் பின்னர் விழா முடிந்ததும் வேற்றூர் நாடிச் செல்வதாகத் தொடங்குகிறது. ஆசிரியர் யாழை மணமக்களுக்கு ஒப்புமை காட்டுகிறார். பாட்டுடைத் தலைவனின் பெருமையினையும் கொடை வழங்கும் சிறப்பினையும், பொருநர் பொற்றாமரையைப் பரிசிலாகப் பெறுவதனையும் ஆசிரியர் சுவைபடக் கூறுகிறார். விறலியர் பொன்னரி மாலையைப் பெறுதலும் கூறப்படுகிறது. வற்றாது வளம் சுரந்து பாயும் பொன்னி நதியின் புதுப்புனல் வெள்ளமும் சுவைபயக்க வருணிக்கப்படுகிறது. செல்வத்தின் செருக்கினையும் வறுமையின் வாட்டத்தினையும் ஆற்றுப் படை அழகுற எடுத்தியம்புகிறது.

'ஆறலை கள்வர் படைவிட வருளின்

மாறுதலை பெயர்க்கும் மருவின் பாலை'

என்ற தொடர், இசையின் ஆற்றலைப் புலப்படுத்துகிறது. கரிகால் வளவன் பெயரும் வென்றியும்,

'வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்தாள்'

என்னும் அடியால் சிறப்பிக்கப்படுகின்றன.

சிறுபாணாற்றுப்படை

இஃது ஓய்மாநாட்டு நல்லியக் கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது; 269 அடிகள் கொண்ட ஆசிரியப்பாவால் அமைந்தது. பாணர்களில் யாழ்ப்பாணர், இசைப்பாணர், மண்டைப்பாணர் எனப் பல பிரிவுகளுண்டு. யாழ் கொண்டு பாடும் யாழ்ப்பாணனே இந் நூலில் குறிக்கப்படுகிறான். யாழ்ப்பாணரில் சிறு பாணரை ஆற்றுப்படுத்தியமையால் சிறுபாணாற்றுப்படை என்றும்