பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்க காலம்

61


பெரும்பாணாற்றுப்படை

500 அடிகளைக் கொண்ட பெரிய பாட்டாதலானும் பேரியாழை வாசிக்கும் பாணர்கள் கூறப்படுவதனாலும், இந்நூல் இப்பெயர் பெற்றது எனலாம். இது தொண்டைமான் இளந்திரையனைக் - கடியலூர் - உருத்திரங்கண்ணனார் பாடியது. வென்வேற்கிள்ளி என்னும் சோழ மன்னனுக்கும் பீலிவளை என்னும் நாகக்கன்னிக்கும் பிறந்தவனே இவ்விளந்திரையன் என்று மணிமேகலை முழங்குகிறது. இப்பாட்டு, பரிசில் பெற்ற பெரும்பாணன் ஒருவன் தன் வழியில் எதிர்ப்பட்ட மற்றோர் இரவலனான பாணனைக் காஞ்சி மாநகரைக் கோநகராகக் கொண்டு செங்கோலோச்சிய இளந்திரையனிடம் ஆற்றுப்படுத்தியதாக அமைந்துள்ளது. *பாணாறு' என்ற பெயரும் இந்நூலுக்கு உண்டு.

எதிர்ப்படுகின்ற இரவலனாகிய பாணனைப் பரிசில் பெற்ற பாணன்,

'பொழிமழை துறந்த புகைவேய் குன்றத்துப்
பழுமரம் தேரும் பறவை போலக்
கல்லென் சுற்றமொடு கால் கிளந்து திரிதரும்

புல்லென் யாக்கைப் புலவுவாய்ப் பாண!'

என்று விளித்து.

'அல்லது கடிந்த அறம் புரி செங்கோல்

பல்வேல் திரையற் படர்குவி ராயின்'

என்று இளந்திரையனிடம் ஆற்றுப்படுத்துகிறான்.

பாட்டின் தொடக்கத்திலேயே யாழின் வருணனை சிறப்பாக அமைந்துள்ளது. ஐவகை நிலங்களில் வாழும் மக்களின் ஒழுகலாறுகள் திறம்பட வருணிக்கப்படுகின்றன. அந்தணர்கள் தங்கள் அருங்கடன் இறுக்கும் முறை சிறப்புற அமைந்துள்ளது. கொற்றவைக்குப் பேய்க் கூட்டங்கள் தங்களை அழுத்தும் பசிப்பிணியைக் கூறுதல், விலங்குகள்