பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்க காலம்

65


நெடுஞ்செழியனை நக்கீரர் பாடிய பாட்டு இது. அகத்திணைக்குரிய செய்திகளே இப்பாட்டில் பெரிதும் இடம் பெறுகின்றன. ஆயினும் 'வேம்புதலை யாத்த நோன்காழ் எஃகம்' என்று பாண்டியனுடைய அடையாள மாலையாகிய வேப்பமாலையைக் குறிப்பிடும் தொடர் வருவதால், இஃது அகப்பாட்டு ஆகாமல் புறப்பாட்டு ஆயிற்று. இதனால், நுட்பமான வேறுபாட்டினையும் நுண்ணிதின் உணர்ந்து பிரித்து எண்ணும் உயர்ந்த தூய தமிழிலக்கிய நெறியினை நாம் வியந்து போற்றாமலிருக்க இயலவில்லை.

வடக்கேயிருந்து வீசும் வாடைக் காற்று, தலைவனைப் பிரிந்து தனிமைத் துன்பத்தால் வருத்தமுறும் தலைவிக்கு நெடுவாடையாகவும், படையெடுத்துப் பாசறையில் தங்கிப் போகத்தில் மனம் செல்லாமல் தான் மேற்கொண்ட வினை முடிக்க வாய்ப்பாய் இருப்பதனால் அரசனுக்கு 'நல்வாடை'யாகவும் ஆயிற்று. எனவே, பாட்டின் தலைப்பு 'நெடுநல்வாடை' எனப் பொருத்தமுற அமைந்தது. இதில் கூறப்படும் பாசறை, கூதிர்ப் பாசறையாகும்.

முதலில் வாடைக்காற்று, ஆயர்கள், ஆநிரைகள், பறவைகள், விலங்குகள், மக்கள் முதலியவர்களுக்கு வாட்டம் தந்து, நடுக்கமுறச் செய்கிறது. இடையில் தலைவனைப் பிரிந்து துயருறும் தலைவியின் செய்தி கூறப்படுகின்றது. அரண்மனை, அந்தப்புரம், கட்டில் முதலியன பாங்குற வருணிக்கப்படுகின்றன. புனையா ஓவியம் போல் கிடக்கிறாள் அரசமாதேவி. அவள் உறையும் அந்தப்புரம் கலை மேம்பாட்டுடனும், அவள் வாழ்வு கற்பு மேம்பாட்டுடனும் சிறந்து விளங்குகின்றன. இறுதியில் அரசன் பாசறையில் படுக்கையில் உறக்கம் கொள்ளாது. நள்ளிரவில் தீவட்டி உடன்வரச் சென்று போரில் புண்பட்ட வீரர்களுக்கு இனிய ஆறுதல் மொழிகளைக் கூறி வருகிறான். இவ்விரு காட்சிகளையும் ஆசிரியர்.

த. - 5