பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்க காலம்

67


இப் பாட்டில், தமிழர் தம் தூய களவொழுக்கம் புலனாகின்றது. முப்பதுக்கும் மேற்பட்ட உவமைகள் பாட்டின் அழகுக்கு அழகு செய்கின்றன.

பட்டினப்பாலை

'முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்
வாரிரும் கூந்தல் வயங்கிழை ஒழிய

வாரேன் வாழிய நெஞ்சே!'
-218-220

.......................................
'அரிமா அன்ன அணங்குடைத் துப்பின்
திருமா வளவன் தெவ்வர்க்கு ஒக்கிய
வேலினும் வெய்ய கானம்; அவன்

கோலினும் தண்ணிய தடமென் தோளே!'
-298-301

என்னும் அடிகள் பட்டினப்பாலையின் சிறப்பான - உயிரான - பொருளை உணர்த்தி நிற்கின்றன.

301 அடிகளைக் கொண்ட இப்பாட்டு, பெரும்பாலும் வஞ்சியடியும், இறுதியில் ஆசிரியப்பாவும் அமைந்த நூலாகும். எனவே, இது 'வஞ்சி நெடும்பாட்டு' எனவும் வழங்கப்படும். பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறும் பாலைத் திணையாகலின் இப்பெயர் இதற்கு அமைந்தது. இப்பாட்டு. சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியதாகும். அதற்குப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசாகப் பெற்றார் என்று பிற்காலத்து நூல்களான கலிங்கத்துப்பரணியும், சங்கரசோழனுலாவும் கூறுகின்றன. சோறுடைத்தான சோழவளநாடும், காவிரி கடலொடு கலக்கும் இடமாம் காவிரிப்பூம்பட்டினமும், கரிகாற் பெருவளத்தானது நெஞ்சப்பாங்கும் இப்பாட்டில் இனிமையுற விளக்கப்படுகின்றன.

பட்டினப்பாலையிலும் சில வானநூற் கருத்துகள் காணப்படுகின்றன. நெய்தல் நில மக்களாகிய பரதவர்களின்