பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்க காலம்

69


இந்த ஆற்றுப்படையில் நன்னன் நாட்டிற்குச் செல்லும் வழியின் தன்மை, இடைவழியில் உண்ணக்கிடைக்கும் உணவுப்பொருள்கள், மன்னன் கொடை, நாட்டின் பெருமை, மலையின் வளம், சோலையின் அழகு முதலியன சிறப்புறக் கூறப்படுகின்றன. நன்னன் முன்னோர் பெருமை, சிவன் அருள், நன்னனின் நவிரமலை, சேயாறு. அவனது நாளோலக்கப் பொலிவு முதலியனவும் விளக்கமாக இப்பாட்டில் கூறப்பட்டுள்ளன. இசை, வாச்சியம் பற்றிய குறிப்புகளையும் காண்கிறோம்.

ஆற்றிடைக் காட்சிகளைத் தொகுத்துச் சொல்லிப் பின்னர் ஒவ்வொன்றாக விரித்துக் கூறும் திறம் இவ்வாற்றுப் படைகளுக்கே உரிய அரிய செய்தியாகப் புலப்படுகிறது: சொல்லாட்சிச் சிறப்பிலும் சிறந்து விளங்குகிறது.

முடிவாக, உடல் வருணனை அவ்வளவாக இல்லாத | அளவான கற்பனை, இயற்கையோடு இயைந்த வாழ்வு. வாணிக வளம், அரசர் கொடைச்சிறப்பு. தமிழ் மக்களின் உயர்ந்த பண்பாட்டு நிலை, பொருளியல் நிலை, இசையும் கலையும் இனிமையுற வாழ்க்கையோடு இயைந்து நின்ற மாட்சி முதலிய இன்னோரன்ன அரிய செய்திகளையெல்லாம் விளக்கமுறக்காட்டி நிற்கும் ஒளி விளக்குகளாக, சங்க இலக்கியப் பாடல்கள் அழகுற அமைந்துள்ளன.

சங்க காலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு பொற்காலம்

அகமும் புறமும் சங்க இலக்கியங்களில் உட்பிழிவான கருத்துகளாகும். எட்டுத் தொகை நூல்களில் ஐந்து நூல்கள் அகத்திணை பற்றியவை; இரண்டு புறத்திணை பற்றியவை. அகமும் புறமும் கலந்து வருவது மற்றொன்றாகும். பத்துப் பாட்டிலும் செம்பாகமான பகுதி ஆற்றுப்படைகளாகும். முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய