பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

தமிழ் இலக்கிய வரலாறு


'நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்,
தென்கடல் முத்தும் குணகடற் றுகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி

வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகு'

- பட். 185-194

எனக் குறிப்பிட்டுள்ளார்.

சங்க இலக்கியப் பாடல்களைப் படிப்போர், சங்க இலக்கியப் பாடல்களில் வரும் தலைவியின் அரிய மாண்பினை வியக்க நேரிடும். மகளிர் மனவளம் மாண்புற விளங்கியதனைக் காணலாம். தலைவனோடு தான் கொண்ட ஆழ்ந்த காதலினைத் தலைவி,

'நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆரள வின்றே'
- குறுந். 3

என்று குறிப்பிடுகின்றாள். தலைவன் தனியே பொருள்வயிற் பிரியக் கருதியபோது,

'துன்பம் துணையாக நாடின், அதுவல்லது

இன்பமும் உண்டோ எமக்கு'
- கலி. 134

என்று கூறித் தலைவனின் துன்பத்திற்கும் துணை நிற்கும் பண்பினை எடுத்துரைத்தாள்.

முடிவாக, சங்கப் பாடல்கள் பழமைக்குப் பழமையாய்ப் புதுமைக்குப் புதுமையாய்த் துலங்குகின்றன. 'சங்ககாலம் தமிழிலக்கியத்தின் பொற் காலம்' என உறுதியாகக் கூறலாம்.