பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. சங்கம் மருவிய காலம்

(கி. பி. 100-600)

மதுரை மாநகரிலே நிலவியிருந்த கடைச்சங்கத்தின் இறுதிக்காலத்திற்குப் பின்னரும், ஆறாம் நூற்றாண்டின் இறுதியிலும், சிறப்பாக ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தோன்றிய பல்லவர்கள் ஆட்சிக் காலத்திற்கு முன்னரும், இடைப்பட்ட ஒருகாலப் பகுதியினைச் சங்கம் மருவிய காலம் என்பர். சங்க காலத்தில் முடியுடைய மூவேந்தராலும், வேளிர் முதலான சிற்றரசர்களாலும் ஆளப்பட்டுவந்த தமிழ் கூறும் நல்லுலகம், கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் அயலார் ஆட்சிக்குட்பட்டது. சோழ நாட்டையும் பாண்டிய நாட்டையும் களப்பிரர்களும், நடுநாட்டையும் தொண்டை நாட்டையும் பல்லவர்களும் கைப்பற்றி ஆண்டார்கள். இவர்கள் தாய்மொழி தமிழாய் அமைந்திருக்கவில்லை. களப்பிரர்கள் பாலிமொழியினையும், பல்லவர்கள் பிராகிருத மொழியினையும் ஆதரித்தனர். ஆதலால், தமிழர்தம் மொழி, கலை, நாகரிகம் முதலியவற்றிற் சில கூறுகளை இழக்கும்படி நேரிட்டது. இக்காலத்தில் ஏற்பட்ட அயலாரின் ஆட்சியிலே தமிழ்மொழி ஆதரிக்கப்படாமல் தாழ்த்தப்பட்டு வளர்ச்சி குன்றிப் போற்றுவாரற்று விளங்கியதால், தமிழ்மொழியில் பெருமளவிலும் சிறப்பான முறையிலும் நூல்கள் தோன்றுவதற்கு இயலாமற் போய்விட்டது. எனவே, தமிழ் இலக்கிய வரலாற்றிலே இக் காலப்பகுதியினை 'இருண்ட காலம்' என்று குறிப்பர்.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

இந்த இருண்ட காலத்திலும் சில தமிழ் நூல்கள் இயற்றப்பட்டன. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்