பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்கம் மருவிய காலம்

77


'நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலை காஞ்சியுட னேலாதி யென்பவே

கைந்நிலையோ டாங்கீழ்க் கணக்கு.'

இந்த வெண்பாவின் பின் இரண்டு அடிகள் பாட பேதம் கொண்டு விளங்குவதால் நூல்களின் பெயரைப் பற்றிய கருத்து வேறுபாடுகளும் கொள்வர். இன்னிலை என்பது பதினெண்கீழ்கணக்கு நூல்களில் ஒன்று என்று திரு. வ. உ. சிதம்பரம்பிள்ளை அவர்கள் தாம் பதிப்பித்த 'இன்னிலை' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்; அதற்கு மாறாக, டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் “இன்னிலை' என்னும் சொல்லைக் காஞ்சியென்ற நூலின் பெயருக்கு அடைமொழியின் பகுதியாகக் கொண்டு, வெண்பாவின் ஈற்றடியில் காணப்படும் கைந்நிலை என்பதனையே பதினெண்கீழ்க்கணக்கு நூலாகக் கூறுவர்.

சங்க காலத்தில் அகவற்பாக்கள் பெருமளவில் நூல்களிற் புகுந்தன; பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பாலும் வெண்பா விரவிவரக் காண்கிறோம். அறநெறியினைத் தெளிவுறுத்துவதற்கு ஏனைய பாவகையினும் வெண்பாவே சிறப்புடைத்து என்பது கொள்ளக் கிடைக்கின்றது. எனவே சங்கம் மருவிய காலத்தில் வெண்பா பெருவழக்கிற்றாயும், அகவற்பா சிறு வழக்கிற்றாயும் விளங்கின.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களிலே பதினொன்று நீதி நூல்களாயுள்ளன. சில அகத்தைப் பற்றியும், சில புறத்தைப் பற்றியும் கூறுகின்றன. இவற்றில் எல்லாம் காலத்தாலும், பொருட்சிறப்பாலும், ஆகிய பல்வகை மாட்சிகளாலும் சிறப்புற்று விளங்குவது திருக்குறள். எனவே, திருக்குறளைப் பற்றி முதலிற் காண்போம்.