பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்கம் மருவிய காலம்

79


கம்பராமாயணம் முதலிய நூல்களில் எல்லாம் குறட் கருத்துகள் விரவிவரக் காண்கிறோம். மேலும், திருவள்ளுவர் வாழ்க்கையில் பல்வேறு பகுதிகளையும் நுணுகிப் பார்த்தவர். உலக வாழ்க்கையில் தாம் கண்டு தெளிந்த உண்மைகளைச் சிக்கலின்றித் தெள்ளத் தெளிவாக மக்கள் மனத்தில் பசுமரத்து ஆணிபோலப் பதியும் வண்ணம், திருக்குறளை இவர் இயற்றியுள்ளார்.

திருவள்ளுவருக்கு நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், நன்முகனார், மாதானுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர் என்னும் வேறு பெயர்களும் வழங்குகின்றன.

"திருக்குறள் பலர்க்குப் பல வகையாகப் பயன்படும் சிறப்பு வாய்ந்த தனி நூலாகும். இலக்கிய ஆராய்ச்சியாளர், அதைச் சிறந்த இலக்கியமாகக் கற்றுக் கலை நயம் காணலாம். அறிவோர், சமய நூலெனப் போற்றி ஒழுக்க முறை களைக் காணலாம். இவ்வாறே ஒவ்வொரு சாராரும் தம் தம் துறைக்கு ஏற்ற கருத்துகளைக் காணலாம். பொதுவாக வாழ்க்கையை ஆராய்ந்து விளக்கியுள்ள எல்லா நூல்களும் இவ்வாறு பலர்க்குப் பல்வேறு வகையாகப் பயன்படுவனவே ஆகும்” [1] என்கிறார், டாக்டர் மு. வ. அவர்கள்.

திருக்குறளின் பெருமை

'அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக்

குறுகத் தறித்த குறள்'

என்று திருவள்ளுவமாலையில் ஒளவையார் பாடியதாக ஒரு செய்யுள் காணப்படுகிறது. எல்லாப் பொருளையும் தன்


  1. டாக்டர் மு. வரதராசனார், திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், முன்னுரை: ப. 52