பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

தமிழ் இலக்கிய வரலாறு


நாலடியார்

திருக்குறளுக்கு அடுத்த நிலையில் சிறப்பாக எண்ணப்படும் நூல் இது.[1] 'ஆலும் வேலும் பல்லுக்குறுதி, 'நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி' என்றும், 'பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்' என்றும் வழங்கும் பழமொழிகள் திருக்குறளோடு நாலடியாரின் சிறப்பையும் புலப்படுத்துவனவாகும். நான்கு அடிகளையுடைய வெண்பாக்களால் ஆகிய நூல் ஆனமையால் 'நாலடி' என்றும், சிறப்பு விகுதியாகிய 'ஆர்' சேர்ந்து ' நாலடியார்' என்று ஆனது என்றும் பெயர்க்காரணம் கூறுவர். நாலடிகள் கொண்ட பாட்டால் அமைந்த நூல்கள் தமிழில் மிகப்பல உளவேனும், சிறப்புப் பற்றி இதனை நாலடியார் என ஓதுவாராயினர். 'நாலடி நானூறு' என்ற பிறிதொரு பெயரும் இந் நூலுக்கு வழங்குகிறது.

இந்நூல் சமண முனிவர் நக்கீரர் பாடியது என்பது யாப்பருங்கல உரையாசிரியர் கருத்து.[2] இந்நூல் சொல் நயம், பொருள் நயம் முதலியன பெற்றுச் சிறந்து விளங்குவது. சங்க நூல்கள் சிலவற்றிற்கு உரையாசிரியர்களான பரிமேலழகர், நச்சினார்க்கினியர் முதலியோரும், சிலப்பதிகாரத்திற்கு உரையெழுதிய அடியார்க்கு நல்லாரும் இந்நூலினின்றும் சில பாக்களை மேற்கோள் காட்டுகின்றனர். திருக்குறட் கருத்துகள் சில இடங்களில் இந்நூலில் காணப்படுகின்றன.


  1. These two (kural and Naladiar) great works serving as mutual commentaries, and together throwing a flood of light upon the whole etnical and social Philoshphy of the Tamil People.
    -G. U Pope's Introduction to Naladiar. p. 11.
  2. மகாவித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை: தமிழ்- அன்றும் இன்றும்.