பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

'மங்கைய ராகப் பிறப்பதற்கே-நல்ல
மாதவம் செய்திட வேண்டுமம்மா'

எனக் கவிமணி பெண்ணின் பெருமையைச் சிறப்பித்துப் பாடுகிறார்.

பாரதியார் பாடல்கள் வீறு கொண்டவை; கவிமணியின் பாடல்களோ, மென்மையும்; கனிவும், இனிமையும் கொண்டு நெஞ்சை உருக்குபவை; அமைதியாக இயங்கி உள்ளத்திற்கு ஊக்கம் தருபவை: அருளறத்தை வற்புறுத்துபவை. கவிமணி 1876 முதல் 1954 வரை நிலவுலகில் வாழ்ந்தார்.


3. பாரதிதாசன்

புதுவைக் குயில்; கவி மதுவை அள்ளி வீசிய புரட்சிக்கவி பாரதிதாசன் 1891 ஆம் ஆண்டு புதுவையில் பிறந்தார். இயற்பெயர் கனக சுப்புரத்தினம்.

அழகின் சிரிப்பு, குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, எதிர்பாராத முத்தம், குறிஞ்சித் திட்டு முதலிய கவிதை நூல்களை இவர் வெளியிட்டுள்ளார்; இரணியம், நல்ல தீர்ப்பு, கற்கண்டு, பிசிராந்தையார் முதலிய நாடகங்களையும் எழுதியுள்ளார். கைம்பெண்ணின் மறுமணம், குடும்பக் கட்டுப்பாடு, சாதிக்கொடுமை, பெண் கல்வி, உழைப்பின் பெருமை முதலியவற்றைத் தம் கவிதையில் வற்புறுத்தியுள்ளார்.

'தமிழுக்கு அமுதென்று பேர்-இன்பத்
தமிழெங்கள் உயிருக்கு நேர்’

‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு'

முதலிய வரிகள் இவரது தமிழ்ப் பற்றைக் காட்டும் திறத்தன.