பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

எழுதியுள்ளார். இவரைச் சிறுகதை மன்னன்' எனப் பலரும் பாராட்டுகின்றனர்.

இன்று புதிய எழுத்தாளர்கள் பலர் சிறந்த சிறுகதைகளைப் படைத்து வருகின்றனர். சு. சமுத்திரம், வண்ண நிலவன், வண்ணதாசன், செயந்தன், பொன்னிலவன் போன்றோர் அவர்களுள் குறிப்பிடத்தக்கவராவர்.

நாவல் இலக்கியம்

நாவல் (Novel) என்னும் சொல் ‘புதுமை’ என்னும் பொருளைத் தரும். இஃது உரைநடையில் அமைந்த நெடிய கதையைக் குறிக்கும். கதைப் பொருள். கதைப் பின்னல், பாத்திரங்கள், பின்னணி, காலம், இடம், உரையாடல், நடை முதலியவை நாவலின் இன்றியமையாக் கூறுகளாகும்.

முதல் தமிழ் நாவல்கள்

தமிழில் நாவல் இலக்கியம் தோன்றிச் சரியாக நூறாண்டுகள் ஆகின்றன. மாயூரம் வேதநாயகம் பிள்ளை 1879இல் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் தமிழில் தோன்றிய முதல் நாவலாகும். அவர் காலத்தில் வாழ்ந்த இராஜம் ஐயர் ‘கமலாம்பாள் சரித்திரம்’ என்னும் நாவலை 1893இல் வெளியிட்டார். மாதவய்யா அவர்கள் 1898இல் பத்மாவதி சரித்திரம், விஜயமார்த்தாண்டம், முத்து மீனாட்சி முதலிய நாவல்களை எழுதினார். பண்டித நடேச சாஸ்திரி 1900இல் தீனதயாளு என்னும் நாவலை வெளியிட்டார் இவை நீதி போதனைகளையும், பெண்களின் துயரையும் சித்திரிக்கின்றன.

தழுவல் நாவல்கள்

ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார், கோதைநாயகி அம்மாள் ஆகிய மூவரும் ஆங்கில நாவல்களைத் தழுவிப் பரபரப்பும் மருமமும்