பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

இலக்கணங்களில் மட்டுமன்றி இலக்கியங்களிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. அம் மாற்றங்களின் வரலாறே இலக்கிய வரலாறாகும்.

மேலை நாட்டார் இலக்கிய ஆராய்ச்சிக்கு அரிஸ்டாட்டிலின் கொள்கைகளை அடிப்படையாகக் கொள்வதைப் போலத் தமிழ்ப் புலவர்கள் தொல்காப்பியப் பொருளதிகாரத்தை இலக்கியக் கோட்பாட்டையும் மரபையும் அறிவதற்கு. அடிப்படையாகவும், தொடக்கமாகவும் கொள்கின்றனர். தமிழ்மொழி அமைப்பையும் இலக்கிய மரபுகளையும் தெளிவுபடுத்தும் முதல் நூல் தொல்காப்பியமே. அஃது இலக்கண நூலாகத் திகழ்தல் குறிப்பிடத்தக்கது.

அகம், புறம் முதலியவற்றின் சிறப்பு

சங்க இலக்கியப் பாடல்கள் சில மரபுகளையொட்டி அமைந்தவை. காதல் பற்றிய செய்தியை அகம் என்றும், வீரம், கொடை, புகழ் முதலிய வாழ்க்கை முறைகளைப் பற்றிய செய்திகளைப் புறம் என்றும் பாகுபடுத்தினர். அகப் பாடல்களில் வரும் தலைவன் தலைவியர் கற்பனை மாந்தர்களாதலின் அவர்கள் பெயர் சுட்டிக் கூறப்படுவதில்லை. புறப் பாடல்களில் நாட்டை ஆளும் அரசனின் வீரச் செயல்களும், கொடைப்பண்பும், குடி மக்களுள் சிறந்தவர்களின் புகழ்மிக்க செயல்களும் குறிப்பிடப்படுகின்றன. அகப் பாடல்கள் கற்பனையால் அமைந்தவை; புறப்பாடல்கள் உண்மைச் செய்திகளைக் கூறுபவை. இவ்வகத்திணைப் புறத்திணைப் பாடல்களுக்கு மலை, காடு, பாலை, வயல், கடல், காலம் முதலியன பின்னணிகளாக அமைகின்றன. அவற்றால் தீட்டப்படும் காநல் வாழ்வு உரிப்பொருள் எனப் போற்றப்படுகிறது. பின்னணிகளுள் இடமும் (மலை, காடு.. பாலை. வயல், கடல்) காலமும் முதற் பொருள்களாகும்.