பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

நன்னான்கு மணியான கருத்துகளைக் கொண்டு விளங்குகின்றது. நல்லவர் பிறக்கும் குடி இதுவென்று அறிய முடியாது என்பதனைப் பின்வரும் பாடல் அழகாக விளக்குகிறது.

‘கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும்; மான்வயிற்றில்
ஒள்ளரி தாரம். பிறக்கும்; பெருங்கடலுள்
பல்விலைய முத்தம் பிறக்கும்; அறிவார்யார்
நல்லாள் பிறக்கும் குடி'

3. இனியவை நாற்பது

இதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதன் சேந்தனார். கடவுள் வாழ்த்தோடு சேர்ந்து 41 பாடல்களை இது கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் இனியவற்றையே' விதந் தோதுவதால் இஃது இனியவை நாற்பது எனப்பட்டது. இளமையை மூப்பென்று கருதிக் கடமையை உடன் ஆற்றல் இனிது, சுற்றத்தார் அச்சமில்லாது வாழ்தலுக்கு உதவுதல் இனிது; அழகிய விலை மகளிரை நஞ்சென்று ஒதுக்குதல் இனிது' என இது கூறுகிறது.

'இளமையை மூப்பென்று உணர் தல் இனிதே;
கிளைஞர்மாட்டு அச்சமின்மை கேட்டல் இனிதே;
தடமென் பணைத்தோள் தளிரிய லாரை
விடமென்றுணர்தல் இனிது.

4. இன்னா நாற்பது

இது கடவுள் வாழ்த்தோடு 41 வெண்பாக்களைக் கொண்டது; பாடியவர் கபிலர். இன்னாமை பயப்பன இவை எனக் கூறலின் இஃது இப்பெயர் பெற்றது; துன்பத்திற்குக் காரணமாகியவற்றைத் தொகுத்துரைப்பது இதன் தனிச் சிறப்பாகும்.