பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



முன்னுரை

தமிழ் இலக்கியம் காலந்தோறும் பொருளாலும் வடிவாலும் வேறுபடுகிறது. காரணம் புலவர்கள் புதுமையை விரும்புகின்றனர். மக்களும் புதிய கருத்துகளை எதிர்பார்க்கின்றனர்.

சங்க இலக்கியம் தமிழ் இலக்கியத்திற்கே ஊற்று, மூலதனம் என்றும் கூறலாம். அவர்கள் தொட்ட எல்லையை யாரும் எந்தக் காலத்திலும் தொட முடியாத நிலைக்கு எட்டிவிட்டது. அதனை அடுத்து எழுந்த ஒப்புயர்வற்ற நூல் திருக்குறள். தமிழர்களின் உயர்ந்த சிந்தனைகளைப் பதிவு செய்து அறவொழுக்கத்தையும் வாழ்வியல் நெறிகளையும் கூறுகிறது; "சிந்தனைக் கதிர்" என்று இதனைக் கூறலாம்.

இளங்கோவின் சிலப்பதிகாரமும், கம்பனின் இராம காவியமும் அரியபடைப்புகள்; காலந்தோறும் புதிய இலக்கியங்கள் தோன்றி வளர்ந்தன. அவை அழியாமல் போற்றப்படுகின்றன. அண்மையில் உரைநடை நூல்கள் அறிவு விளக்க நூல்களாக விளங்குகின்றன; நாளிதழ்கள் தமிழைப் பரப்புகின்றன.

இலக்கியம் அறிவதற்கு ஒரு வரலாறு தேவைப்படுகிறது. பல அறிஞர்கள் இத்துறையில் ஆய்வு செய்து வரலாறு எழுதி உள்ளனர். அவற்றைச் சுருக்கமாகக் கூறும் முயற்சியே இது. அளவில் சிறியது ஆயினும் விளைவில் பெரியதே; அடிப்படைச் செய்திகள் அனைத்தும் கொண்டு விளங்குகிறது. தமிழ் இலக்கிய வரலாற்றை அறிவதற்கும், இலக்கிய அறிமுகம் பெறுவதற்கும், மாணவர்களுக்கும், மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் வெளியிடப்படுகிறது.

ரா. சீனிவாசன்