பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63

தோன்றியவர் திருமாலைப் 'பூதம்' என்று பாடியதனால் இப்பெயர் பெற்றவர் எனக்கூறுவர்.

'அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சித்தை இடுதிரியா - என்புருகி
ஞானச் சுடர் விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத்தமிழ் புரிந்த நான்'

இஃது இவர் பாடிய இரண்டாம் திருவந்தாதியின் முதற்பாடலாகும்.

இவரும் வெண்பா யாப்பால் அந்தாதித்தொடை அமைத்துப் பாடல்களைப் பாடியுள்ளார். இவர் காலம் ஏழாம் நூற்றாண்டு.

3. பேயாழ்வார்

இவர் திருமயிலையில் பிறந்து திருமாலைப் பாடிப் புகழ் பெற்றவர். இறைவன் மீது மிகுந்த காதல் கொண்டு பேயாய் அலைந்ததனால் பேயாழ்வார் என்ற பெயரைப் பெற்றவர் என்பர்.

“திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்.
அருக்கன் அணி நிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைகண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று.”

இஃது இவர்கண்ட திருமால் காட்சியாகும். இவர் பாடல்கள் மூன்றாம் திருவந்தாதியாக அமைந்துள்ளன.

இவரும் பூதத்தாழ்வாரும் ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தனர்.

4. திருமழிசையாழ்வார்

தொண்டை நாட்டின் ஒரு பகுதியாகிய திருமழிசையில் பிறந்தவர் இவர். இவரது இயற்பெயர் பக்திசாரர்