பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

இறைத்தொண்டுக்காக வழிப்பறியும் தயங்காமல் செய்து இறைவனால் ஆட்கொள்ளப் பெற்றார். இவர் பாடிய நூல்கள் பெரிய திருமொழி, திருக்குறுந் தாண்டகம். திருநெடுந்தாண்டகம், சிறிய திருமடல், பெரிய திருமடல் திருவெழு கூற்றிருக்கை என்பவை.

குலம் தரும் ; செல்வம் தந்திடும்; அடியார் படுதுயர்
ஆயின வெல்லாம்
நிலந்தரஞ் செய்யும்; நீள் விசும் பருளும்; அருளொடு
பெரு நில மளிக்கும்
வளந்தரும்; மற்றும் தந்திடும்; பெற்ற தாயினும்
ஆயின செய்யும்;
நலந்தருஞ் சொல்லை நான்கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்'

இஃது இவர் நாராயணன்மேல் கொண்ட பத்தியை நன்கு காட்டவல்லது.

இவர் காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டு.

6. தொண்டரடிப் பொடியாழ்வார்

இவர் திருமண்டங்குடி என்னும் சோழநாட்டுப் பகுதியில் முன்குடுமிச் சோழியப் பார்ப்பனர் குலத்தில் தோன்றியவர், இவர் இயற்பெயர் விப்பிர நாராயணர், திருமாலை, திருப்பள்ளி யெழுச்சி என்பன இவர் பாடியவை.

'பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே'