பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77

பணியை உணர்த்துகிறது. அதனையே செயற்கரிய செயலாகச் சித்திரிக்கிறது; எளிய நடை, தெளிவான சொற்கள், உயர்ந்த கருத்துகள், பண்பாடு நெறிகள், பக்திச்சுவை முதலியவற்றைக் கொண்டுள்ளது.

கம்பராமாயணம்

பாரதமும், இராமாயணமும் இதிகாசங்களாகையால் அவற்றைக் காப்பியங்களில் சேர்க்கவில்லை.

இதன் ஆசிரியர் கம்பர். இவர் பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தார்: வடமொழி இராமாயணத்தைத் தமிழில் கற்பனையழகும் தமிழ் மரபும் தோன்றப் பாடினார். சோழநாட்டு மக்களின் வாழ்வு, ஆட்சித்திறம், பண்பாடு, காதல்நெறி முதலியவற்றைக் காட்டுவதாகவே கம்பனது படைப்பு அமைந்துள்ளது. காடும், நாடும், மாந்தர் இயல்பும், காட்சிப் புனைவுகளும் தமிழகத்தையே நினைவு படுத்துகின்றன.

பாலகாண்டம், அயோத்தியா காண்டம். ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்னும் ஆறு பகுதிகளைக் கொண்ட இந்நூலுக்குக் கம்பர் இட்ட பெயர் இராமவதாரம் என்பது. இது 113 படலங்களையும் 10,500 பாடல்களையும் கொண்டுள்ளது; காவியக் கட்டுக் கோப்பும், நாடக நயமும் கொண்டு விளங்குகிறது. இதனைக் ‘கம்ப நாடகம்' எனவும் அறிஞர் போற்றுவர்.

‘பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச்
செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடிய ளாகி
அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்'

இப்பாடல் கம்பரின் சந்த நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.