பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

இவர் உரை எழுதினார் என்பர், இறுதி நான்கியல்களுக்கும் இவரது உரை கிடைக்கவில்லை. பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவக சிந்தாமணி முதலாய இலக்கியங்களுக்கும் சிறந்த உரைகளைத் தந்துள்ளார். இவர் காலம் பதினான்காம் நூற்றாண்டு.

அடியார்க்கு நல்லார்

சிலப்பதிகாரத்திற்குச் சிறந்த விரிவுரை ஒன்றனை இவர் எழுதியுள்ளார். இசை, நாடகம், வானநூல் முதலியவற்றைப் பற்றிய குறிப்புகள் பல இவர் தந்துள்ளமையிலிருந்து இவரது பல்கலைப் புலமை புலனாகிறது. இவர் காலம் கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு.

சிலப்பதிகாரத்திற்கும் பழைய குறிப்புரை ஒன்றும் உள்ளது. அதனை எழுதியவர் அரும்பத உரையாசிரியர் என்பர்.

பரிமேலழகர்

திருக்குறளுக்கு அமைந்த பதின்மர் உரைகளுள் பரிமேலழகர் உரையே சிறந்ததாகப் போற்றப்படுகிறது. பரிமேலழகர் வடமொழி, தமிழ்மொழி இரண்டிலும் புலமை பெற்றவர். இலக்கண மரபு தவறாமல் உரை எழுதுவதிலும், சொற்களுக்குத் தக்க வகையில் நயமும் விளக்கமும் தருவதிலும் இவர் வல்லவர். இவர் காலம் கி.பி. பதின் மூன்றாம் நூற்றாண்டு.

சிற்றிலக்கியங்கள்

அறம், பொருள், இன்பம், வீடு எனும் உறுதிப் பொருள்கள் நான்கனுள் ஒன்றோ பலவோ குறைந்து வருவது சிற்றிலக்கியமாகும். இது வடமொழிப் பிரபந்த வகையினைச் சார்ந்ததாகும். கோவை, உலா, அந்தாதி,