பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

83

தூது, கலம்பகம், பரணி, பிள்ளைத் தமிழ், குறவஞ்சி முதலியன இதனுள் அடங்கும். இவற்றுள் சில சோழர் காலத்தில் தோன்றின. நாயக்கர் காலத்தில் மிகுதியாகத் தோன்றின.

கோவை

கடவுளரையோ, வேந்தரையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, அகப்பொருள் துறைகளைக் கோவை படக் கூறுவது கோவையாகும், இதன் பாடல்கள் கட்டளைக் கலித்துறையால் அமைவது இயல்பு. திருக்கோவையார் மிகச் சிறந்ததாகப் போற்றப்படுகிறது.

நாயக்கர் காலத்து வாழ்ந்த பொய்யாமொழிப் புலவர் எழுதிய கோவை நூல் தஞ்சைவாணன் கோவை என வழங்குகிறது.

உலா

இறைவனோ வேந்தனோ நகர்க்கண் உலா வருவதாகவும், அவர்களைக் கண்டு பருவமடைந்தவர் காதல் கொள்வதாகவும் பாடப்படுவது உலா என்னும் நூல் வசையாகும். பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் எனும் ஏழு பருவ மகளிரின் நிலையை உள்ளவாறு விளக்குவதில் இந்நூல் தலைசிறந்ததாகும்.

சேரமான் பெருமாள் நாயனார் பாடிய திருக்கைலாயஞான உலாவே தமிழில் தோன்றிய முதல் உலாவாகும். இது பல்லவர் காலத்தில் எழுந்தது. ஒட்டக்கூத்தர் எழுதிய மூவருலா மிகச் சிறந்ததாகப் பாராட்டப்படுகிறது.

திரிகூடராசப்பக் கவிராயரின் திருக்குற்றால நாதர் உலாவும், இரட்டைப் புலவர்களின் ஏகாம்பர நாதர் உலாவும், அந்தகக்கவி வீரராகவ முதலியாரின் திருவாரூர் உலா