இலக்கணம் அருளிய இறையனார்
9
அவரே 'இறையனார் அகப்பொருள்' என்னும் இவ்விலக்கண நூலை இயற்றிக் கொடுத்துள்ளார்; இதனைப் பாண்டியனிடம் கொண்டு போய்க் கொடுப்பேன்" என்று தன்னுள் சொல்லிக் கொண்டான்.
அரசனிடம் தகடுகளை அளித்தல்
அவன் வழக்கமாகச் செய்யும் வழிபாட்டை விரைவில் செய்து முடித்தான். செப்புத் தகடுகளைப் பட்டாடையில் சுற்றினான். அதனை எடுத்துக்கொண்டு பாண்டியன் அரண்மனையை அடைந்தான். அரசனைக் கண்டு வணங்கி, அவன் கையில் செப்புத் தகடுகளைக் கொடுத்தான். அவை கிடைத்த விதத்தையும் அரசனுக்குத் தெரிவித்தான்.
அரசன் அகமகிழ்ச்சி
உக்கிரப் பெருவழுதியாகிய பாண்டியன் அத்தகடுகளைக் கூர்ந்து நோக்கினான்; தலைப்பில் ‘இறையனார் அகப்பொருள்’ என்று எழுதியிருப்பதைக் கண்டான். அவற்றில் எழுதியுள்ள செய்யுட்களை வாசித்தான். அவை பொருள் இலக்கணமாக இருப்பதை அறிந்தான். அவனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு ஒர் அளவே இல்லை. 'நம் கவலையைப் போக்க, இறைவரே இலக்கணம் இயற்றினார்;