பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உரைகண்ட உத்தமன்

19

யாக எடுத்து உரைத்தார். இறையனார் அகப்பொருளில் உள்ள ஒவ்வொரு சூத்திரத்திற்கும் பதம் பதமாக உரை கூறினார். ஒவ்வொரு சொல்லுக்கும் நுட்பமான உரை சொன்னார். அவர் உரை சொல்லத் தொடங்கியது முதல் அதனை முடிக்கும் வரை உருத்திரசன்மனது முகம் நன்றாக மலர்ந்து இருந்தது. அவன் ஆனந்தக் கண்ணீரைச் சொரிந்த வண்ணமாகவே இருந்தான். உடம்பில் உள்ள உரோமங்கள் சிலிர்க்க உவகையுடன் அந்த உரையைக் கேட்டான்.

கடவுள் நம்பிக்கை

இந்த இனிய காட்சியைச் சங்கப் புலவர்கள் அனைவரும் பார்த்தனர். எல்லோரும் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தனர். ‘இறையனார் அகப்பொருளுக்கு இன்றே உண்மையான உரையைக் கண்டோம்’ என்று ஆரவாரம் செய்தனர். நடுநிலையாளனாகச் சங்கப் பலகையில் அமர்ந்து உரை கண்ட உத்தமனை வாயார வாழ்த்தினர். இவ்வரலாற்றால் ‘கடவுளை நம்பினோர் கைவிடப்படார்’ என்ற உண்மை நன்றாக விளங்குகிறது அன்றோ?

— — —