6. சங்கப் புலவர் சாத்தனார்
சாத்தனார் ஊரும் பேரும்
தமிழ்நாட்டில் உள்ள சிறந்த நகரங்களில் ஒன்று மதுரை. அது கடைச் சங்க காலத்தில் பாண்டிய நாட்டின் தலைநகரமாக விளங்கியது. அந்நகரில் மூன்றாம் சங்கமாகிய கடைச்சங்கம் நடைபெற்றது. அச்சங்கத்தில் நாற்பத்தொன்பது தமிழ்ப் புலவர்கள் இருந்தார்கள். அவர்களில் சாத்தனார் என்பவரும் ஒருவர். அவர் சீத்தலை என்ற ஊரில் பிறந்தவர்; வணிகர் குலத்தைச் சேர்ந்தவர். அவர் மதுரைமாநகரில் தானிய வாணிகம் நடத்திவந்தார். அதனால் அவரை 'மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார்' என்று எல்லாரும் சொல்லுவர். கூலம் என்பதற்குத் தானியம் என்று பொருள்.
சாத்தனார் தமிழ்ப்பணி
சாத்தனார் சிறந்த தமிழ்ப்புலமை உடையவர். புலவர்களின் திறமையை ஆராய்ந்து அறிவதில் அவர் வல்லவர். அவர் தானியங்களின் தரத்தை அளப்பதுடன் புலவர்களின் புலமைத் தரத்தையும் அளந்து வந்தார். பிற புலவர்கள் இயற்றும் செய்யுட்களையும் நூல்களையும் முதலில் சாத்தனார் பார்வையிடுவார்.