பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்கப் புலவர் சாத்தனார்

41

அவன் ‘கள்வனைக் கொன்று சிலம்பைக் கொண்டு வருக’ என்று கட்டளை யிட்டான். அதனால் கோவலன் மதுரைமா நகரில் கொலை செய்யப்பட்டான்.

மன்னனும் மதுரையும் அழிதல்

கணவனை இழந்த கண்ணகி, பாண்டியன் அவைக்குச் சென்றாள்; அவனுடன் வழக்காடினாள்; தன் கணவன் கள்வன் அல்லன் என்பதை நிலைநாட்டினாள். பாண்டியன், தான் நீதி தவறியதை அறிந்தான். உடனே அவன் தன் உயிரை நீக்கினான். அப்போது அவன் பட்டத்தரசியும் உயிர்விட்டாள். கண்ணகி தன் கற்பின் வல்லமையால் மதுரைமா நகரைத் தீக்கு இரையாக்கினாள். பின்பு சேர நாட்டிற்குச் சென்றாள். இந்தச் செய்திகளை யெல்லாம் சாத்தனார் நேரில்கண்டு வருந்தினார். அவரும் சேர நாட்டிற்குச் சென்றார்.

சேரநாட்டில் சாத்தனார்

அந்நாளில் சேரநாட்டைச் செங்குட்டுவன் என்னும் அரசன் ஆண்டு வந்தான்; அவனுக்குத் தம்பியார் ஒருவர் இருந்தார். அவர் இளமையிலேயே துறவு பூண்டவர். ஆதலின் அவரை இளங்கோவடிகள் என்று அழைப்பர். அவர் சிறந்த தமிழ் அறிஞர்.