48
தமிழ் காத்த தலைவர்கள்
செய்தியை அறிவித்தான். அவர்கள், “ஏட்டைப் பூட்டிவைத்த புண்ணியர்களே வந்தால்தான் அறையின் கதவைத் திறப்போம்” என்றனர். அதைக்கேட்ட அரசன், தேவாரம் பாடியருளிய மூவருக்கும் பெரிய விழாவை நடத்தினான். அவர்கள் திருவுருவங்களை அழகிய பல்லக்கில் வைத்து அலங்கரிக்கச் செய்தான். அப் பல்லக்கைப் பொன்னம்பலத்தைச் சார்ந்த அறையின் முன்னர்க் கொண்டுவந்து நிறுத்தினான். “தேவாரம் பாடி, அறையுள்ளே மூடி வைத்த மூவரும் எழுந்தருளினர்; இனிக் கதவு திறக்கலாமே!” என்று அன்புடன் கூறினான்.
அரசன் அடைந்த துயரம்
தில்லைவாழ் அந்தணர்கள் அரசன் செயலைக் கண்டு வியந்தனர். அந்த அறையின் கதவைத் திறந்து காட்டினர். அந்தோ! அங்கிருந்த ஏடுகளைக் கரையான் புற்று மூடி இருந்தது. அதைக்கண்ட அரசன் அளவில்லாத துயரம் கொண்டான். புற்றினை நீக்கி ஏடுகளைச் சிதையாது எடுக்குமாறு கட்டளையிட்டான். கரையான் அரித்தவை போக எஞ்சிய ஏடுகளில் இருந்த பாடல்களை ஒன்று சேர்க்குமாறு நம்பியை வேண்டினான்.