திருமுறை கண்ட சோழன்
தேவாரத் திருமுறைகள்
அவர் பெரிதும் முயன்று அப்பாடல்களைத் தொகுத்தார். திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்களை முதல் மூன்று திருமுறைகளாக வகுத்தார். திருநாவுக்கரசர் பாடிய தேவாரப் பாடல்களை அடுத்த மூன்று திருமுறைகளாக வகுத்தார். சுந்தரர் பாடிய செந்தமிழ்த் தேவாரப் பாடல்களை ஏழாம் திருமுறையாக வகுத்தார். இவ்வாறு மூவர் அருளிய பாடல்களை எல்லாம் முதல் ஏழு, திருமுறைகளாக வகுத்துக் கொடுத்தார்.
திருமுறை கண்ட சோழன்
இராசராசன், நம்பியாண்டார் நம்பி என்பாரின் நல்ல துணையால் தேவாரப் பாடல்களைக் கண்டுபிடித்தான். அவற்றைத் திருமுறைகளாக வகுத்துத் தமிழ்நாட்டிற்கு வழங்கினான். அவன் அத்தகைய முயற்சி எடுத்துக் கொள்ளாது போனால் மூவர் தேவாரம் மண்மூடி அழிந்து போயிருக்கும். அவற்றை அழியாது காத்த பெருமை இராசராசனுக்கு உரியதாகும். ஆதலின் அவனைப் புலவர்கள் எல்லோரும் ‘திருமுறை கண்ட சோழன்’ என்று போற்றினர். அம்மன்னனால் தமிழும் சைவமும் தனிச்சிறப்பெய்தின.