பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

தமிழ் காத்த தலைவர்கள்


திருமுறையின் பெருமை

தேவாரத் திருமுறைகள், தமிழில் தோன்றிய சிறந்த தோத்திர நூல்கள். அவற்றில் உள்ள பாடல்கள் தெய்வத்தன்மை வாய்ந்தவை ; படிப்பவர் மனத்தைப் பத்தி வெள்ளத்தில் இழுத்துச் செல்லும் வல்லமை உடையவை; மக்களுக்கு நன்னெறியைக் காட்டும் மாண்புடையவை. இத்தகைய சிறந்த தமிழ்ப் பாடல்களே அழியாமல் இராசராசன் காத்தான். அவை நாடெங்கும் பரவுமாறு நல்ல பணிகளைச் செய்தான். இக் காரணத்தால் அவன் தமிழ் காத்த தலைவருள் ஒருவன் ஆனான்.

உணர்த்தும் உண்மைகள்

இராசராசன் செய்த அரிய பணியால் நாம் அறிவது என்ன? மக்களுக்குக் கலைப் பற்றும் கடவுள் பற்றும் நிரம்ப வேண்டும். அவைகளே ஒருவன் வாழ்வை உயர்வுடையதாகச் செய்யும். இவ் வுண்மைகளை இராசராசன் வரலாற்றால் அறிகின்றோம் அல்லவா?