பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காவியம் பாடிய காவலன்

53

குவிந்து விடக் கூடாதே என்று எண்ணினான். அதனால் தமிழுக்குக் குறை வந்துவிடுமே என்று வருந்தினான். நல்ல தமிழைக் காக்கும் நோக்கத்துடனேயே அவன் புலவர்களைக் குட்டி அறிவு புகட்டினான். அன்றியும் பல நூல்களையும் இயற்றினான். அவன் கூர்ம புராணம், இலிங்க புராணம், காசி காண்டம், வாயு சங்கிதை, திருக்கருவை அந்தாதி நூல்கள், நறுந்தொகை முதலிய பல நூல்களைப் பாடியுள்ளான்.

நைடதம் புலவர்க்கு ஔடதம்

அதிவீரராமன் தான் இயற்றிய நூல்களையெல்லாம், தன் தமையனாகிய வரதுங்கராமனிடம் கொண்டுபோய்க் காட்டுவான். அவன் அவற்றைப் படித்து மன மகிழ்வான். அவற்றின் சிறப்புக்களைப் பாராட்டுவான். ஒரு சமயம் அதிவீரராமன் நளனுடைய வரலாற்றைக் காவியமாகப் பாடினான். நளன் நிடத நாட்டை ஆண்ட அரசன் ஆதலின் அந்தக் காவியத்திற்கு ‘நைடதம்’ என்று பெயர் சூட்டினான். அவன் அந் நூலைத் தன் அவையில் இருந்த புலவர்களிடம் காட்டினான். அவர்கள் எல்லோரும் அதனைப் படித்துச் சுவைத்தனர்; ‘நைடதம் புலவர்க்கு ஒளடதம்’ என்று பாராட்டினர்.

த.கா.த-5