தமிழ்ச் சங்கம் அமைத்த தலைவர்
67
கம்பராமாயணம், திருக்குறள் என்னும் இரு நூல்களையும் எங்கிருந்தாவது பெற்று வருமாறு ஆட்களை ஏவினார். மதுரையில் எவரிடமும் அந்நூல்கள் கிடைக்கவில்லை. அங்குள்ள கடைகளிலும் அந்நூல்கள் விலைக்குக் கிடைக்கவில்லை. இந்நிலையைக் கண்டு தேவர் மிகவும் வருந்தினார். ஒரு காலத்தில் சங்கம் இருந்து தமிழ் ஆராய்ந்த மதுரையிலோ இந்த இழிந்த நிலை இருக்கவேண்டும் என்று ஏங்கினார். தமிழ் வளர்த்த பாண்டியரின் தலைநகரமே தமிழை மறந்துவிட்ட நிலை அவரைப் பெரிதும் வாட்டியது.
மதுரை அரசியல் மாநாடு
1901 ஆம் ஆண்டு மதுரையில் அரசியல் மாநாடு ஒன்று நடைபெற்றது. அம்மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராகப் பாண்டித்துரைத் தேவர் அமைந்தார். மாநாட்டின் தொடக்கத்தில் தேவர் யாவரும் வியக்குமாறு வரவேற்புரை நிகழ்த்தினார். மூன்று நாட்கள் தொடர்ந்து அம்மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் முடிவிலும் தேவர் பேச வேண்டிய வாய்ப்பு ஏற்பட்டது. அப்பேச்சே மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைப்பதற்குக் காரணம் ஆயிற்று.