இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தமிழ்ச் சங்கம் அமைத்த தலைவர்
71
நூல்கள் இராமநாதபுரத்திற்கு வந்து சேர்ந்தன. உடனே தேவர் அவற்றை நெருப்பிற்கு இரையாக்கினார். பிழையான நூல்கள், மக்கள் கையில் ஏறக்கூடாது என்னும் எண்ணத்தாலேயே அவர் அவ்வாறு செய்தார்.
உணர்ந்த உண்மை
பாண்டித்துரைத் தேவர் தமிழ்ப் புலவர்களை ஆதரித்தார். தமிழ் நூல்களை வெளியிட்டார். அவற்றை வெளியிடுவார்க்குப் பெரும்பொருளை உதவினார். மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நாட்டினார். பிழைபட வெளிவந்த நூல்களைப் பணம் கொடுத்து வாங்கித் தீயில் இட்டார். இவரது வரலாற்றால் நாம் அறிவது என்ன ? ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற அளவு தமிழ்ப் பணி செய்ய வேண்டும். இவ்வுண்மையை இவ் வரலாற்றால் தெரிந்தோம் அல்லவா ?