பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

நன்கறிந்த ‘கோவலன்’ கதையை எழுதுவது நல்ல பயனைத் தரும் என்பது சுவாமிகளின் நோக்கமாயிருந்திருக்க வேண்டும். முதலில் கோவலனாக நடித்த திரு. சூரியநாராயண பாகவதர் அவர்கள் சிறந்த பாடகராயிருந்ததால் அவருக்கென்றே பெரும்பாலும் வசனங்கள் தேவை யில்லாத முறையில் எளிய நடையில் முழுதும் பாடல்களாகவே எழுதிக் கொடுத்தார் சுவாமிகள். அதன் பிறகு திரு. வேலு நாயர் அவர்கள் கோவலனாக நடித்தபோது வசனங்களும் எழுதப்பட்டன. திரு. பரமேஸ்வர ஐயர் அவர்கள் குழுவில் என் தந்தையாரும் நடிகராயிருந்தமையால் இச்செய்திகளை அவர் மூலம் நான் அறியமுடிந்தது.

கோவலன் நாடகத்தை முதன் முறை மதுரையில் அரங்கேற்றியபோது நிகழ்ந்த ஒரு சம்பவம் சுவாமிகளின் புலமைக்கு மற்றொரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

‘கோவலன்’ நாடகக் கதை எல்லோருக்கும் தெரிந்திருப்பதால் விளக்கமாகக் குறிப்பிட வேண்டியதில்லை. கண்ணகி கொடுத்த காற்சிலம்பை விற்றுவர மதுரை நகருக்குப் போவதாகக் கூறுகிறான் கோவலன். அப்போது கண்ணகியின் வாய் மொழியாக,

“மாபாவியோர் கூடி வாழும் மதுரைக்கு
மன்னா போகாதீர் இன்று”

என்ற பாடல் பாடப்படுகின்றது. மதுரை நகரில் அவர்கள் முன்னிலையிலேயே மாபாவியோர் கூடி வாழும் மதுரைக்குப் போகவேண்டாம் என்று பாடினால் அவர்கள் மனம் எப்படியிருக்கும்?...இந்தப் பாடலைப் பாடத் தொடங்கியதும் சபையோர் கூச்சலிட்டு “எங்கே சங்கரதாஸ் ? கொண்டு வா மேடைக்கு” என்று ஆரவாரம் செய்தார்கள்.