பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26


சுவாமிகள் ஒருமுறை இவரைச் சென்னையிலே சந்தித்தபோது இவருடைய கண்டி ராஜா நாடகத்திலுள்ள சந்தப் பாடல்களைப் புகழ்ந்து வெகுவாகப் பாராட்டினர். பிள்ளை அவர்கள் அப்பொழுது கையில் பொருளில்லாது மிகவும் வறுமை வாய்ப்பட்டிருந்தார். இதை அருகிலிருந்த அன்பர்களின் வாயிலாக அறிந்த சுவாமிகள், அந்த இடத்தில் அவரிடம் நேரில் பணம் கொடுத்தால் காசு வாங்கக் கூசுவாரென்றெண்ணி நூறு ரூபாய் நோட்டுக்களை ஓர் உறையில் வைத்துப் பிள்ளையவர்களின் பையில் போட்டுவிட்டார். சுவாமிகளிடம் பேசிவிட்டு வண்டியேறிப் புறப்பட்ட திரு. சிவசண்முகம் பிள்ளை அவர்கள் சற்று தூரம் சென்றதும் எதற்கோ பையை எடுத்தவர் ‘சங்கரதாசனின் அன்புக் காணிக்கை’ என்றெழுதப்பட்ட உறையையும், அதனுள் வைக்கப்பட்டிருந்த நூறுருபாய் நோட்டுக்களையும் பார்த்துத் திரும்பி வந்து “புலவனைப் புலவனே அறிவான்; ஆனால், புலவனைப் புலவன் போற்றுவதில்லை. தாங்கள் அதற்கு விதி விலக்கு!” என்று கண்கலங்கக் கூறிச் சுவாமிகளைத் தழுவிக் கொண்டார்.

ஆண்ட சக்கரவர்த்தி

கம்பெனியில் திங்கட்கிழமை தோறும் பஜனை நடைபெறுவது வழக்கம். நாங்களெல்லோரும் கூட்டமாகவும் தனித் தனியாகவும் சுவாமிகளின் பாடல்களைப் பாடுவோம். மதுரையில் ஒரு நாள் புட்டுத் தோப்பிலுள்ள கம்பெனி வீட்டில் திங்கட்கிழமை பஜனை வழக்கம்போல் நடந்து கொண்டிருந்தது. சித்திரைத் திருவிழா நடைபெறும் சமயம். இரவோடு இரவாக சுவாமி ஊர்வலம் புறப்பட்டுப் புட்டுத் தோப்புக்கு வருகிற நாள். பஜனையில் நாங்களெல்லோரும் பாடி முடித்த பிறகு, வந்திருந்த சில நண்பர்களும் தனித் தனியே பாடினார்கள். கடைசி-