பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

தெலுங்குமொழி ஆதிக்கம் பெற்றிருந்த காலத்தில் நாடக மேடையில் தீந்தமிழ்ப் பாடல்களைப் பொழிந்து தமிழுலகை மகிழ்வித்தவர் சங்கரதாஸ் சுவாமிகள்.

தோற்றம்

1867-ஆம் ஆண்டில் ஆவணித் திங்கள் 22-ஆம் நாள் தமிழ் மாநிலம் சுவாமிகளைத் தாங்கும் பேறு பெற்றது. தமிழர் வரலாற்றிலே அழியாத இடம் பெற்ற கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரனார், மகாகவி பாரதியார், வீர பாண்டியக் கட்டபொம்மன் முதலிய தியாகிகளையும், வீரர்களையும், புலவர்களையும் தந்த திருநெல்வேலி மாவட்டம் தான் நாடகப் புலவராகிய சங்கரதாஸ் சுவாமிகளையும் நமக்குத் தந்தது. தென் பாண்டி நாட்டின் துறைமுக நகரங்களில் ஒன்றான தூத்துக்குடியிலே, வெள்ளையரை விரட்டியடித்த 'வெள்ளையத் தேவன்' பரம்பரையிலே போரில் புறமுதுகு காட்டாத வீர மறக்குடியிலே தாமோதரக் கணக்கப் பிள்ளை என்பாரின் செல்வத் திருமகனாகப் பிறந்தார் சங்கர தாஸ் சுவாமிகள்.

கல்வி

தந்தையார் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய தமிழ்ப் புலவர். நகர மக்கள் அவரை 'இராமாயணப் புலவர்' என்ற சிறப்புப் பெயரிட்டு அழைத்தனர்.

"தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல் "

என்னும் தமிழ் மறையை நன்கறிந்த தாமோதரத் தேவர் தமது புதல்வனுக்குத் தாமே தமிழ்க் கல்வி புகட்டினார்.

அக்காலத்தில் 'புலவரேறு' என்று அறிஞர்களால் போற்றப்பட்ட பழனி தண்டபாணி சுவாமிகளிடம் நமது