பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டி.கே. சண்முகம் や35

சிலர் கேள்விப்பட்டுமிருக்கலாம். ஆனால், அந்நாடகங்களை இயற்றிய ஆசிரியர் இன்னாரென்பதை உங்களிற் பெரும்பாலோர் அறிந்திருக்க முடியாது. கோவலன், வள்ளி திருமணம், பவளக்கொடி, அல்லி அர்ஜுனா, சீமந்தனி, சதியனுசூயா, மணிமேகலை, லவகுசா, சாவித்திரி, சதி கலோசனா, பிரகலாதன், சிறுத்தொண்டர், பிரபுலிங்கலீலை, பார்வதி கல்யாணம், வீரஅபிமன்யு முதலிய பல நாடகங்கள் சுவாமிகளால் இயற்றப்பெற்றவை.

    இந்த நாடகங்களையெல்லாம், ஒழுங்காக நாடகங்களை நடித்துவந்த எந்த நாடக சபையாரிடம் நீங்கள் பார்த்திருந்தாலும் அவர்கள் நமது சுவாமிகளின் 

பாடல்களையும் உரையாடல்களையும் உபயோகப்படுத்தியிருப்பார்கள் என்பதற்கையமில்லை.

    மேற்குறிப்பிட்ட நாடகங்கள் அனைத்தும் இன்று சிலருக்குப் பிடிக்காதிருக்கலாம். ஆனால், இவைதாம் தமிழ் நாடக மேடையைப் பாதுகாத்துத் தந்தவை என்பதைத் தமிழர்கள் மறந்துவிடக் கூடாது. புராண இதிகாசக் கதைகள் என்பதற்காக அந்நாடகங்களிலே பொதிந்து கிடக்கும் பொன்னுரைகளையும், பேருண்மைகளையும், அவற்றைப் பல ஆண்டுகளுக்குமுன் இயற்றியருளிய புலவர் பெருமானின் நாடகத் திறனையும் நல்லிசைப் புலமையையும் அலட்சியப்படுத்துதல் கூடாது.