38 ❖
தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்
உடனிருந்து பார்த்த எங்கள் சக நடிகர்கள் சிலர் இன்றும் இருக்கின்றனர். திரு. பழனியா பிள்ளை அவர்கள் எல்லோரையும் அழைத்து ‘அபிமன்யு’ நாடகத்தைக் காண்பித்து ஆனந்தக் கண்ணீர்விட்டார்.
நூற்றுக்கு மேற்பட்ட பாடல்கள்!... அதற்கேற்ற உரையாடல்கள்!ஆரம்பத்திலிருந்து முடிவுவரை அடித்தல் திருத்தல் கிடையாது!... ஒரு புத்தகத்தைப் பார்த்து நகல் எடுக்கும் வேலையைக்கூட இவ்வளவு விரைவாகச் செய்ய முடியாது. கற்பனையாக நான்கு மணி நேரம் நடைபெறக்கூடிய ஒரு நாடகத்தையே எழுதி முடித்துவிட்டார் சுவாமிகள். அவருடைய புலமைத் திறனை என்னென்று கூறுவது?
“அடே சின்னப் பயலே! இந்த ‘அபிமன்யு’ நாடகம் உனக்காக எழுதப்பட்டது” என்று கூறிச் சுவாமிகள் அன்று என் முதுகிலே தட்டியபோது எனக்கு அது பெரிதாகத் தோன்றவில்லை. இன்று அதை நினைத்துப் பூரிப்படைகிறேன்; பெருமிதங் கொள்கிறேன்.
கற்பனைச் சிறப்பு
ஒரே இரவில் இவ்வளவு துரிதமாக எழுதி முடித்த ‘அபிமன்யு’ நாடகத்தில் உள்ள பாடல்களிலும் உரையாடல்களிலும் நிறைந்துள்ள கருத்துக்கள் எண்ணி எண்ணி இன்புறுதற்குரியன. சுவை மிகுந்த ஒரு வசனத்தைக் குறிப்பிடுகிறேன்.