பக்கம்:தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்

9



இயலை வகுக்கின்றார். காரணம் அது நாடகத்தின் உயிர் நாடியாகும்; பாடலுக்கும் பொதுவானதாகும். எனவே அது பற்றி விரிவாகப் பேசிய ஆசிரியர், மெய்ப்பாடு கவிதையை விட நாடகத்திற்கு இன்றியமையாதது என்பதனை உணர்ந்தார். அதனை வலியுறுத்துவான் வேண்டி மெய்ப்பாட்டியலின் இறுதிச் சூத்திரத்தில் ‘கண்ணாலும் செவியாலும் ஆழ்ந்து கண்டால் ஒழிய மெய்ப்பாடு அறியற்பாற்று அன்று' என்று கூறுமுகத்தான் இது நாடகத்திற்கே உரியது என்பதை வலியுறுத்தி விட்டார்.

இந்நிலையில் செய்யுளியல் 180ஆம் சூத்திரத்தையும் பேராசிரியர் அச்சூத்திரத்திற்கெழுதிய உரையையும் காண்டல் வேண்டும். பண்ணித்திச் செய்யுள் இதுவெனக் கூற வந்த ஆசிரியர் தொல்காப்பியனார்.

பாட்டிடைக் கலந்த பொருள வாகிப்,
பாட்டின் இயல பண்ணத்தி இயல்பே
தொல்பொருள்செய்-180

என்று கூறுகிறார். 'பழம் பாட்டினுாடு கலந்த பொருளே தனக்குப் பொருளாகக் கொண்டு, பாட்டும் உரையும் போலச் செய்யப்படுவன பண்ணத்தி என்றவாறு' என்பது பேராசிரியர் இதற்குக் கூறும் பொருளாகும். மேலும் 'மெய்வழக்கு அல்லாதனவற்றைப் பண்ணத்தி என்று கூறல் மரபு' என்றும் அவரே குறிக்கின்றார். 'அவையாவன நாடகச் செய்யுளாகிய பாட்டு மடையும், வஞ்சிப் பாட்டும் மோதிரப் பாட்டும் கடகண்டும் முதலாயின' என்று விளக்கமும் தருகிறார். உலக வழக்கை அப்படியே கூறினால், அது நாடகம் என்னும் பெயர் பெறுவதில்லை. உலக