பக்கம்:தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்

23



நாடக வழக்கும் உலக வழக்கும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்
(தொல்பொருள்:அகத்-53)

என்ற நூற்பா அகத்திணையியலிற் கூறப் பெற்றது. உலக வழக்கம் பற்றி எழுந்த அகம், புறம் பற்றிய பிரிவினைகள் அவை பற்றிய பாடல் முறைகள் அகத்திற்கே உரிய பாக்கள், அகம், புறம் இரண்டிற்கும் பொதுவான பாடல்களின் வகைகள் ஆகிய அனைத்தையும் செய்யுளியலிற் கூறிய பிறகு எஞ்சியிருப்பது நாடக வழக்குப் பற்றிய விளக்கம் ஒன்று மட்டுமேயாகும்.

நாடக வழக்கு என்பதற்குத் தொல்காப்பியனார் தரும் விளக்கமே, செய்யுளியலிற் காணப்படுவனவும் இது வரை எடுத்தோதப் பெற்றனவுமான நான்கு சூத்திரங்களுமாகும். இவற்றை ஒரு கோவைப் படுத்திக் காண்டல் பொருத்தமுடையதாம். தொல்காப்பியனார் காலத்துக்கு முன்னரே நாடகம் என்பது இத்தமிழ் நாட்டில் நிலவி வந்தது என்பதும் அது மக்களால் நன்கு அறியப் பெற்றிருந்தது என்பதும் உணரத் தக்கன என்று கொண்டால்தான் ஆசிரியர் யாவரும் அறிந்த ஒன்றை நினைவூட்டுபவர் போல, ‘நாடக வழக்கும் உலக வழக்கும் கலந்து அமைவதே பாடல் சான்ற புலனெறி வழக்கம்' என்று அகத்திணையில் சூத்திரஞ் செய்தார் என்று கொள்ள முடியும். ஒன்றைக் குறிப்பிட்டுக் கூறியவுடன், அதனை அடுத்தடுத்த சூத்திரங்களில் விளக்கிச் செல்லும் ஆசிரியர், நாடக வழக்கு, உலக வழக்கு என்ற இரண்டையும் விளக்காமற் போனதன் காரணம், அவை பெருவழக்