பக்கம்:தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்

33



தாகலின் அதனை வேறுபடுத்திக் காட்டுவதே இந்நூற்பாவின் நோக்கமாகும். கவிதையில் வரும் மெய்ப்பாட்டை அறிய, நுண்மையான அறிவு வேண்டும். கண்ணும், செவியும் தேவை இல்லை. பிறவிக் குருடராகிய அந்தகக் கவி வீரராகவனார் சிறந்த கவிஞராகவும், ரசிகராகவும் இருந்தார். மாம்பழச் சிங்க கவிராயரும் அவ்வாறே. 'ஏடு ஆயிரங்கோடி எழுதாது தன்மனத்து எழுதிப் படித்த விரகன்' என்று வீரராகவ முதலியார் தம்மைப் பற்றிக் கூறிக்கொள்கிறார்.

அப்படியானால் கவிதையில் வரும் மெய்ப்பாட்டை அனுபவிக்கக் கண்ணும் தேவை இல்லை; செவியும் தேவை இல்லை. பின்னர்க் கண்ணும், செவியும் எந்த மெய்ப்பாட்டை அனுபவிக்கத் தேவைப்படுகின்றன? நாடகத்தில் வரும் மெய்ப்பாட்டை அனுபவிக்க வேண்டுமாயின் கண்ணும், செவியும் தேவைப்படும். அதிலும் வேடப் பொருத்தத்தையும், உரையாடல் நயத்தையும் அனுபவிக்க வேண்டுமாயின் கண்ணும் செவியும் கூர்மையாக்கப் பட்டு நாடகத்தைக் கண்டும் கேட்டும் அனுபவித்தால் ஒழிய, முழுப்பயனை அடைய முடியாது. அதனால்தான் ‘கண்ணினும், செவியினும் திண்ணிதின் உணரும் உணர்வுடை மாந்தர்...' என்று நூற்பா பேசுகிறது.

இவ்விரண்டு பொறிகளும் கூர்மையாக (திண்ணிதாக) இருப்பதோடல்லாமல் உணர்வும் அதனுடன் கலக்க வேண்டும். வெறும் அறிவால் அனுபவிக்கப்படுவதன்று நாடகக் கலை. அது உணர்வின் துணை கொண்டு அனுபவிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இந்த நுணுக்கத்தைக் காட்டவே 'உணர்வுடை மாந்தர்’ என்று தொல்காப்பியம் பேசிச் செல்கிறது.